‘ஏரியில் பாலம் கட்டும் இடம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது’ - மத்திய அரசு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jan 2022 12:45 AM GMT (Updated: 2022-01-07T06:15:41+05:30)

ஏரியில் பாலம் கட்டும் இடம், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீனப்படைகள் இடையே மோதல் போக்கு உள்ளது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன படையினருக்கும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

அங்கே பாங்காங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கிற வகையில் சீனா ஒரு பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் படம் மூலம் அம்பலத்துக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாலத்தால் பாங்காங் சோ ஏரியின் இரு பகுதிகளுக்கும் இடையேயான தொலைவை கடக்க ஆகிற பயண நேரம் வெகுவாக குறைந்து விடும், இது சீன படையினருக்கு சாதகமான அம்சம். இதற்கு ஏற்றாற்போல இந்தியாவும் தனது செயல்பாட்டு திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு சார்பில் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பிரச்சினையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாலம் கட்டப்படுகிற இடம், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில்தான் 60 ஆண்டு காலமாக உள்ளது. இது போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒரு போதும் ஏற்றது இல்லை.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள அருணாசலபிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சீனா மறுபெயர் சூட்டி இருப்பதை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கடுமையாக சாடினார்.

“இது அனுமதிக்க முடியாத பிராந்திய உரிமை கோரல்களை ஆதரிப்பதற்கான அபத்தமான செயல்” என கண்டித்தார்.


Next Story