காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதல் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதல் - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 7 Jan 2022 7:22 AM GMT (Updated: 2022-01-07T12:52:28+05:30)

பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் ராணுவத்தினருடன் அம்மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில் புத்காம் மாவட்டத்தில் உள்ள சோல்வா கிரல்போரா சதூரா பகுதியில்பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. 

அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இன்று நடத்தப்பட்ட என்கவுன்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் வைத்திருந்த  3 ஏகே 57 ரக துப்பாக்கிகள், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் 8 இதழ்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டு (2022)-ல் இதுவரை மொத்தம் 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐ.ஜி. விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.  

இதனிடையே, என்கவுன்டரின் போது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது  பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் ஸ்ரீநகர் நகரைச் சேர்ந்த வசீம் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

Next Story