ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் மருந்துகளை இந்தியா வழங்கியது


ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் மருந்துகளை இந்தியா வழங்கியது
x
தினத்தந்தி 8 Jan 2022 2:04 AM GMT (Updated: 8 Jan 2022 2:04 AM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கியது.

புதுடெல்லி, 

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்காரணமாக இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1-ந்தேதி 1.6 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா, ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நமது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3-வது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா இன்று வழங்கியது. அவை காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன” என கூறப்பட்டுள்ளது.


Next Story