5- மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு- அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?


5- மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு- அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?
x
தினத்தந்தி 8 Jan 2022 3:29 PM GMT (Updated: 8 Jan 2022 3:29 PM GMT)

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளும்  தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் அறிவிப்பு  குறித்து பல்வேறு மாநிலங்களின் தலைவர்களும் கூறியதை கீழ் காண்போம்.

தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மீணடும் மக்களின் ஆசியையும் ஆதரவையும் பெறும். தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, தனி மெஜாரிட்டியுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். 

உத்தரகாண்ட் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத், ‘தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை காங்கிரஸ் கட்சி எப்போதும் கடைப்பிடிக்கிறது’ என்றார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் விடைகொடுக்க உள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். விதிமுறைகளை சமாஜ்வாடி கட்சி பின்பற்றும் என்று கூறிய அவர், விதிமுறைகளை ஆளுங்கட்சி பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘பிரதமர் மோடி ஏற்கனவே பல்வேறு அரசியல் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். உ.பி.யில் கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 10-15 முறைக்கு மேல் சந்தித்துள்ளார். எனவே, ஆளுங்கட்சிக்கு ஒன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக நலிவடைந்த கட்சிகள் தான் பிரச்சனைகளை சந்திக்கும்’ என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக பஞ்சாப் மாநில மந்திரி வெர்கா கூறி உள்ளார். மேலும், ‘கொரோனா பரவி வருவதால் தேர்தல் ஆணையம் கடுமையான நெறிமுறைகளை விதிக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் வாக்கு சதவீதம் அதிக அளவில் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். சமூக ஊடகங்கள், டிவி மற்றும் பிற ஊடக வடிவங்கள் மூலம் எங்கள் தேர்தல் அறிக்கையை மக்களுக்கு கொண்டு செல்வோம்’ என்றும் மந்திரி வெர்கா தெரிவித்தார்.

கோவா முதல் மந்திரி பிரமோத் சவந்த் கூறுகையில், “ கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவை நான் வரவேற்கிறேன்.கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.  தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும்” என்றார். 

Next Story