பா.ஜனதாவை தோற்கடித்து விலைவாசி உயர்வுக்கு முடிவுகட்ட மக்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ்


பா.ஜனதாவை தோற்கடித்து விலைவாசி உயர்வுக்கு முடிவுகட்ட மக்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ்
x
தினத்தந்தி 8 Jan 2022 7:19 PM GMT (Updated: 8 Jan 2022 7:19 PM GMT)

5 மாநில தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்துக்கு முடிவு கட்ட மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் வரவேற்பு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7-ந்தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 5 மாநில தேர்தல் அட்டவணையை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தீவிரமாக களமிறங்குவோம்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், பஞ்சாப்பில் ஆட்சியை தக்க வைத்து, மீதமுள்ள 4 மாநிலங்களிலும் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். இதற்காக ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும், தொண்டனும் தீவிரமாக களமிறங்குவார்கள்.

இந்த தேர்தல்களில் ஒரு சமநிலையான களத்தை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

பா.ஜனதாவையும், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தையும் தோற்கடிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்தவரின் தந்தையை மந்திரி சபையில் வைத்திருக்கும் பா.ஜனதாவை வீழ்த்த விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதைப்போல பா.ஜனதாவையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் தங்கள் வாக்கு மூலம் முறியடிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தங்கள் மீதான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நமது பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரட்டை தோல்வி

இதைப்போல வன்கொடுமைகள் மற்றும் விவசாய எதிர்ப்பு மனநிலைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு தலித் பிரிவினருக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்டில் இயங்கி வரும் இரட்டை என்ஜின் அரசுகள், ஒரு இரட்டை தோல்வி என்பதை நிரூபித்து உள்ளன.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.


Next Story