தேசிய செய்திகள்

கொரோனா பணிக்கு இளநிலை மருத்துவ மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் - மத்திய சுகாதாரத்துறை கடிதம் + "||" + Undergraduate medical students for corona work Utilize - Letter from the central Department of Health

கொரோனா பணிக்கு இளநிலை மருத்துவ மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் - மத்திய சுகாதாரத்துறை கடிதம்

கொரோனா பணிக்கு இளநிலை மருத்துவ மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் -  மத்திய சுகாதாரத்துறை கடிதம்
இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.
புதுடெல்லி,

ஒமைக்ரான் வகை கொரோனாவால் நாடு முழுவதும் மீண்டும் நோய்த் தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகையால் கொரோனா உறுதியாகும் விகிதம் அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரத்துறை பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இரண்டாம் அலையின் போது தொற்று உறுதியாகும் நோயாளிகளில் 20 - 23 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது 5 - 10 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டாக நேரிடலாம்.

எனவே, மருத்துவ இளநிலை இறுதியாண்டு மாணவர்கள், செவிலியர்கள் கல்லூரி இளநிலை மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு, முதிநிலை ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பயிற்சி மாணவர்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாநிலங்களில் பெரிய கொரோனா சிகிச்சை மையங்கள், தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி அதற்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கைகளை ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாக மாற்றி தேவையான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை அதிகரிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் செல்போனில் மருத்துவ ஆலோசனை பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓய்வுபெற்ற மருத்துவ வல்லுநர்களை கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.