மோசடி புகாரில் கைது: ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு


மோசடி புகாரில் கைது: ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 10 Jan 2022 9:16 PM GMT (Updated: 10 Jan 2022 9:16 PM GMT)

வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு தள்ளிவைத்தது

புதுடெல்லி,

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் ரத்தானதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

அவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் கடந்த 5-ந் தேதி கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர். பின்னர் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன கேட்டு ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, ‘கொரோனா காலத்தில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும், 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் தேவையில்லாமல் ஒருவரை சிறைக்கு அனுப்பக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ராஜேந்திர பாலாஜி எவ்வித பெரும் குற்றத்தையும் செய்யவில்லை’ என வாதிட்டார்.

இதில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 32 பேர் புகார் அளித்துள்ளனர். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை அறிந்து தலைமறைவானார். எனவே அவரை கைது செய்வதுதான் சரியாக இருக்கும் என காவல்துறை நினைத்தது. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு அரசியல் காரணங்களுக்கானது என்று கூறுவது அடிப்படையற்றது’ என கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு மாதம் ஜாமீன் அளிக்கவும், ஒரு மாதத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்கவும் யோசனை தெரிவித்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை நாளை மறுதினம் (நாளை) தாக்கல் செய்வதாகவும், அதன்பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு (அதாவது நாளை) தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

Next Story