டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 25 சதவீதத்தை தாண்டி அதிர வைத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை தாக்கி வருகிறது. தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.
தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. தொற்று பாதிப்பு உயர்வால் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் தொற்று பாதிப்பு 25 சதவிகிதத்திற்கும் மேல் உள்ளதால் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமோ என வர்த்தகர்கள் அஞ்சும் நிலை உள்ளது. இந்த நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ கவலைப்பட வேண்டாம். நாங்கள் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம்” என்றார்.
டெல்லியில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அனைத்து தனியார் அலுவலகங்களையும் மூட டெல்லி அரசு இன்று உத்தரவு பிறப்பித்தது. பணியாளர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது