கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்


கொரோனா பரவல்: ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2022 5:24 PM GMT (Updated: 12 Jan 2022 5:24 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடில்லி :

இந்தியாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் தங்களிடம் இருப்பதை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிபடுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து மருத்துவமனைகளிலும், மருத்துவ ஆக்சிஜன் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம், 48 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும்.ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும். அவற்றை கண்காணித்து, பராமரிப்பு பணிகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வினியோகிக்கப்படுவதை, மாவட்ட நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட இதர மருத்துவ சாதனங்களும் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆக்சிஜன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாநில அளவில், ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில், தனியார் துறைகளை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story