மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைப்பு


மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:09 AM GMT (Updated: 13 Jan 2022 8:09 AM GMT)

மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையில், மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் கடந்த 9-ம் தேதி தொடங்கி பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.

கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரோனா பரவும் சூழ்நிலையில் இந்த பாதயாத்திரையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கர்நாடக அரசு மீது கடுமையாக சாடியது.

இந்த விவகாரம் தொடர்பாக 14-ம் தேதி பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரைக்கு கர்நாடக அரசு அதிரடி தடை விதித்தது. தடையை மீறி பாதயாத்திரை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேகதாதுவில் புதிய அணைகட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். 

அந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பாதயாத்திரையை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Next Story