3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா


3-வது நாளாக உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 13 Jan 2022 6:53 PM GMT (Updated: 13 Jan 2022 6:53 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார். புதிதாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ., கட்சியை விட்டு விலகினார்.

லக்னோ, 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10-ந்தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து, உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து அடுத்தடுத்து மந்திரிகள் பதவி விலகி வருகிறார்கள்.

கடந்த 11-ந்தேதி, மூத்த கேபினட் மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்தார். மறுநாள், வனத்துறை மந்திரி தாராசிங் சவுகான் பதவி விலகினார். 

இந்தநிலையில், 3-வது நாளாக நேற்று உத்தரபிரதேச ஆயுஷ் துறை இணை மந்திரி (தனி பொறுப்பு) தரம்சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஆனந்திபென் படேலுக்கு அவர் அனுப்பி வைத்தார்.

கடிதத்தில், ‘‘உத்தரபிரதேசத்தில் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், படித்த வேலையற்றோர், சிறிய, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் ஆகியோர் கைவிடப்பட்டு விட்டனர். அவர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, மந்திரிசபையில் இருந்து நான் விலகுகிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

தரம்சிங் சைனி தனது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி எதுவும் கூறவில்லை. இருப்பினும், அவர் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து விட்டதாக அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமூகநீதி போராளியான தரம்சிங் சைனியின் வருகையால் தங்களது முற்போக்கு அரசியலுக்கு கூடுதல் பலம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். தரம்சிங் சைனி, பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் ஆவார். 4 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஏற்கனவே பதவி விலகிய சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு நெருக்கமானவர்.

இதற்கிடையே, ஆளும் பா.ஜனதாவில் இருந்து நேற்று மேலும் ஒரு எம்.எல்.ஏ. விலகினார். அவர் பெயர் டாக்டர் முகேஷ் வர்மா. பெரோசாபாத் மாவட்டம் ஷிகோகாபாத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த 3 நாட்களில், கட்சியை விட்டு விலகிய 7-வது பா.ஜனதா எம்.எல்.ஏ. இவர் ஆவார். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் சுதந்திர தேவ் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், சுவாமி பிரசாத் மவுரியாதான் தனது தலைவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்டோரை உத்தரபிரதேச அரசு புறக்கணிப்பதால் இம்முடிவுக்கு வந்ததாகவும் முகேஷ் வர்மா கூறியுள்ளார். அவர் சமாஜ்வாடி கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story