நடத்தையில் சந்தேகம்: 2-வது மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி


நடத்தையில் சந்தேகம்: 2-வது மனைவியை கொலை செய்த கொலை குற்றவாளி
x
தினத்தந்தி 14 Jan 2022 6:06 AM GMT (Updated: 2022-01-14T11:36:02+05:30)

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை குற்றவாளி தனது 2-வது மனைவியை கொலை செய்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மோடி நகரை சேர்ந்தவர் சுபாஷ் குமார் (வயது 45). இவர் 2002-ம் ஆண்டு ஒருநபரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

சுபாஷ் குமாருக்கு மனைவி உள்ள நிலையில் அவரை விட்டு பிரிந்து 2015-ம் ஆண்டு பூஜா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பூஜாவின் முதல் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவர் சுபாஷை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

பூஜாவுக்கு முதல் கணவர் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளன. பூஜா தனது குழந்தைகளுடன் தனது இரண்டாவது கணவரான சுபாஷ் குமாருடன் மோடிநகர் உமேஷ் பூங்கா காலணி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், மனைவி பூஜாவுக்கு வேறுசில ஆண்களுடன் தகாத உறவு உள்ளதாக கணவன் சுபாஷ் குமாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், மனைவி பூஜாவின் நடத்தையில் சந்தேகத்தால் சுபாஷ் நேற்று காலை வீட்டில் வைத்து சண்டையிட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பூஜாவை சுபாஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர், வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய சுபாஷ் பள்ளியில் இருந்த பூஜாவின் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது முதல் மனைவியில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பூஜா ரத்த வெள்ளத்தின் பிணமாக கிடத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சுபாஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். முதல் மனைவியின் வீட்டிற்கு சுபாஷ் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த கிராமத்தில் உள்ள ஒரு காட்டிற்குள் சுபாஷை கைது செய்தனர். 

இரண்டாவது மனைவி பூஜாவை கொலை செய்த சுபாஷ் அவரின் 2 குழந்தைகளையும்  கொலை செய்யவே முதல் மனைவியின் கிராமத்திற்கு அந்த குழந்தைகளை அழைத்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுபாஷை கைது செய்த போலீசார் பூஜாவின் இரண்டு குழந்தைகளையும் மீட்டனர்.

Next Story