உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்


உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன - அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 14 Jan 2022 6:50 PM GMT (Updated: 14 Jan 2022 6:50 PM GMT)

உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து பாஜக முன்னாள் தலைவரும், மந்திரியான (தொழிலாளர் நலத்துறை) சுவாமி பிரசாத் மவுரியா (வயது 68) மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷக்யா ஆகியோருடன் நேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

‘‘நாங்கள் சட்டப்பேரவை தேர்தலுக்காக காத்திருந்தோம். தற்போது தேர்தல் நெருங்கி வந்து விட்டது. சமாஜ்வாதியும் அம்பேத்கர்வாதியும் இணைந்துள்ளதால் இதை யாராலும் தடுக்க முடியாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுகின்றன. 

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர். சுவாமி பிரசாத் மவுரியா தன்னுடன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்குரிய நல்ல அரசை அமைப்போம்’’

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story