தேசிய ராணுவ தினம்: பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து


தேசிய ராணுவ தினம்: பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து
x
தினத்தந்தி 15 Jan 2022 4:36 AM GMT (Updated: 15 Jan 2022 4:36 AM GMT)

தேசிய ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'ராணுவ தினத்தில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லைகளைப் பாதுகாப்பதிலும் அமைதியைப் பேணுவதிலும் நமது வீரர்கள் தொழில்முறை, தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். உங்கள் சேவைக்கு தேசம் நன்றி கூறுகிறது. ஜெய் ஹிந்த்!' என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'ராணுவ தினத்தை முன்னிட்டு, குறிப்பாக நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், நேர்த்திக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு வார்த்தைகளால் நியாயம் சொல்ல முடியாது.

இந்திய ராணுவ வீரர்கள் விரோதமான நிலப்பரப்புகளில் பணியாற்றுகிறார்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் உட்பட மனிதாபிமான நெருக்கடியின் போது சக குடிமக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளனர். வெளிநாடுகளிலும் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது' என்று கூறியுள்ளார்.

Next Story