காஷ்மீர்: 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது


காஷ்மீர்: 3 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 15 Jan 2022 5:20 AM GMT (Updated: 15 Jan 2022 5:20 AM GMT)

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபுரா நகரின் டொர்புரா பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த அர்ஃபத் முஜீத் தர், துஷீப் அகமது தர், மோமின் நசீர் கான் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அந்த 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த 3 பங்கரவாதிகளையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், கையெறி குண்டு, தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.

இந்த பயங்கரவாதிகள் ஆயுதங்களை தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு வழங்கி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story