மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும்: அஜித்பவார்


மராட்டியத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும்: அஜித்பவார்
x
தினத்தந்தி 15 Jan 2022 8:53 PM GMT (Updated: 15 Jan 2022 8:53 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா சூழலை பொறுத்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்.

மும்பை

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

அஜித்பவார் ஆலோசனை

கொரோனாவை வீழ்த்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 5 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று கொரோனா நிலவரம் குறித்து புனேயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் புனே மாவட்ட அதிகாரிகள், புனே மாநகராட்சி மற்றும் பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி, ஜில்லா பரிஷத் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:-

அடுத்த வாரம் முடிவு

தினந்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனினும் இன்று நடந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் சீக்கிரத்தில் தளர்த்தப்படாது. இதேபோல கொரோனா சூழலை பொறுத்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்.

நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பரவலுக்கு மக்கள் காரணம்

மேலும் கூட்டத்துக்கு முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் தான் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. சமீபத்தில் பலர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி உள்ளனர். அதே நேரத்தில் பொது நிகழ்ச்சிகள் குறிப்பாக வெளிமாநிலத்தவர்கள் கலந்து கொண்ட திருமணங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், நாம் விதிகளை பின்பற்ற வேண்டும். கடந்த வாரத்தில் 6 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு சதவீதம் தற்போது 17 ஆக உயர்ந்து உள்ளது.

புனேயில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி வேகமாக நடக்கிறது. இதேபோல கொரோனா சோதனை கிட் விற்பனை செய்யும் மருந்துக்கடைகள் அதை வாங்கும் நபரின் தொடர்பு எண்ணை குறித்து கொள்ள வேண்டும். சோதனை முடிவு குறித்து அதிகாரிகள் தொடர்பு கொண்டு அந்த நபரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய அஜித்பவார், மாநில முதல்-மந்திரி ஆதித்ய தாக்கரே என தவறாக குறிப்பிட்டார். பின்னர் சுதாரித்து கொண்ட அவர், ‘சட்டசபையில் தவறாக பேசியதை திரும்ப பெற்றுக்கொள்வது போல, ஆதித்யாவை திரும்ப பெற்று கொள்வதாக' கூறினார்.


Next Story