இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு


இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு:  பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு
x
தினத்தந்தி 16 Jan 2022 12:11 PM GMT (Updated: 16 Jan 2022 12:11 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் என்பதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. தற்போது வரை 156.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

 இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்ட டுவிட் பதிவில், ‘கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது” என்றார். 

இந்த நிலையில், தடுப்பூசி திட்டம் ஓராண்டு நிறைவு ஆனதையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு தரப்பினரையும் பாராட்டி உள்ளார். அமித்ஷா இது பற்றி கூறுகையில்,  பிரதமர் மோடியின் திறமையான தலைமைத்துவம் மற்றும் உறுதிப்பாடுடன் கூடிய தொடர் முயற்சிகள் ஆகியவற்றால், இந்தியா உலகுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அரசாங்கமும் குடிமக்களும் நாட்டு நலன் கருதி  ஒருங்கிணைந்து ஒரு பொதுவான இலக்கை நோக்கி செயல்பட்டால் எந்த ஒரு சவாலையும் கடந்து வர முடியும் என்ற முன்னுதாரணத்தை இந்தியா உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும்  சுகாதாரத்துறை பணியாளர்கள், விஞ்ஞானிகள், கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அமித்ஷா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


Next Story