மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை... மத்திய அரசு மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது - நிதின் கட்காரி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும்வகையில், பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தை விரைவுபடுத்த மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிதின் கட்காரி அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பை, 

மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் ஏற்பாட்டில், பிரதமரின் ‘கதி சக்தி தென்மண்டலம்’ தொடர்பான தென்மாநிலங்களின் மந்திரிகள் பங்கேற்ற காணொலி மாநாடு நேற்று நடைபெற்றது. அதில், மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

நாட்டின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்தியா, ஜனநாயக மற்றும் கூட்டாட்சி தன்மை கொண்ட நாடாக இருப்பதால், மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய அரசு மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக பிரதமரின் ‘கதி சக்தி’ என்ற தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதை வெற்றி பெறச்செய்ய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பால் வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும்.

முடிவு எடுக்கும் பணியை ஒளிவுமறைவின்றியும், வேகமாகவும் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் உள்பட அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் ‘கதி சக்தி’ திட்டங்களை அமல்படுத்த முடியாது.

திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படாதவகையில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட ஒப்புதல்களை விரைந்து அளிக்க வேண்டும்.

‘கதி சக்தி’ திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதால் மாநிலங்களுக்கு நிறைய வருவாய் கிடைக்கும். அந்த பணத்தை உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கவும், மக்களுக்கு சேவை செய்யவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒப்புதல் அளிப்பதில் மாநிலங்கள் ஒத்துழைத்தால், மாநிலங்களின் பிரச்சினைகளை தீர்த்து, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம். மதுரை-கொல்லம் வழித்தட திட்டம், வருகிற ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

‘பாரத்மாலா’ திட்டத்தின்கீழ், முதல்கட்ட பணிகளில், 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கான 575 சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். இதற்கு மூலதன செலவு ரூ.6 லட்சம் கோடி ஏற்படும். இரண்டாம் கட்ட பணிகளுக்கான சிபாரிசுகள், ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதில் 40 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் போடப்படும்” என்று அவர் பேசினார்.

Next Story