மராட்டிய மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 10:08 AM GMT (Updated: 20 Jan 2022 10:08 AM GMT)

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,  

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கி உள்ளது. இருந்தபோதும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. இந்த சூழலில் நேற்று மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,697 ஆக பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக பின்பற்றப்பட்டு பள்ளிகள் செயல்படும் என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் மும்பை உட்பட மராட்டிய மாநிலம் முழுக்க ஜனவரி 24ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், கொரோனா பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியிருக்கும் நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இல்லாத காரணத்தால் இதே அறிவிப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story