35 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை


35 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2022 12:58 PM GMT (Updated: 2022-01-21T18:28:27+05:30)

நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், பொய் செய்திகளையும் பரப்பிய 35 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட 35 யூ-டியூப் சேனல்கள், 2 இணையதளங்கள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 டுவிட்டர் கணக்குகள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்த கணக்குகள் என்று உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கணக்குகள் எல்லாம் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களுடன் இயங்கும் இணையதளங்கள், யூ-டியூப் சேனல்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் 20 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story