நடிகை கடத்தல் வழக்கு; நடிகர் திலீப்பை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை


நடிகை கடத்தல் வழக்கு; நடிகர் திலீப்பை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை
x
தினத்தந்தி 22 Jan 2022 1:02 PM GMT (Updated: 22 Jan 2022 1:02 PM GMT)

நடிகை கடத்தப்பட்ட வழக்கில் வருகிற 27ந்தேதி வரை நடிகர் திலீப்பை கைது செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.

திருவனந்தபுரம்,



நடிகை மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் விசாரணைகள் நிறைவடைந்து எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க  இருந்தது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் புதிய சில தகவல்களை திலீபின் நண்பராக இருந்த மலையாள திரைப்பட இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் நடைபெற்ற பின் உடனே அந்த வீடியோ காட்சிகளை திலீப் தனது மொபைல் மூலம் கண்டதாகவும் அதனை தனக்கு காண்பித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த  நிலையில் மேலும் இந்த வழக்கில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளை பழிவாங்கவும் திலீப்பும் அவரது உறவினர்களும் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கில் 12 சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தை அணுகியது. இதற்கு நடிகர் திலீப்பின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

வழக்கு விசாரணையை மனப்பூர்வமாக நீட்டி கொண்டு போக அரசு தரப்பு முயல்வதாக நடிகர் திலீப் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தனி பெஞ்ச் நீதிபதி இந்த வழக்கில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.  ஆனாலும் இந்த வழக்கில் அரசு தரப்பு கோரியிருந்தபடி 12 சாட்சிகளில் எட்டு சாட்சிகளை மறுபடியும் விசாரிக்கலாம் என்று அரசுக்கு அனுமதி அளித்தார்.

மேலும் நான்கு சாட்சிகளை விசாரிப்பதற்கான அவசியம் இல்லை என்றும் நீதிபதி தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதன்பேரில் 8 சாட்சிகளை மீண்டும் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த விசாரணையை அரசு அதிக காலம் நீட்டி கொண்டு போக கூடாது, 10 நாட்களுக்குள் விசாரணை நிறைவடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அத்துடன் அரசு தரப்பு கோரி உள்ளபடி திலீப்பின் உறவினர்கள் உடைய மொபைல், திலீப்பின் கைப்பேசி அழைப்புகளை பரிசோதிக்கவும் கேரள ஐகோர்ட்டு  அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகளை மிரட்டியதாக கேரள காவல்துறையினர் மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஜனவரி 27ந்தேதி வரை நடிகர் திலீப்பை கைது செய்ய தடை விதித்துள்ளது.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்டோர் விசாரணை அதிகாரி முன், 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.


Next Story