மும்பை;கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறப்பு


மும்பை;கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இன்று பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 1:43 AM GMT (Updated: 24 Jan 2022 2:06 AM GMT)

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை,

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாநில அரசு அனுமதி

மராட்டியத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் நோய் பரவல் உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் 8-ந் தேதி பள்ளிகள் மூடப்பட்டன. மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், உடனடியாக மீண்டும் மூடப்பட்டதால் கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தநிலையில் தலைநகரில் கொரோனா பாதிப்பு வேகமாக குறையத்தொடங்கியது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் தீவிர ஆலோசனைக்கு பிறகு அரசு மாநிலம் முழுவதும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து மும்பையிலும் மழலையர் வகுப்புகள் முதல் பள்ளிகளை திறக்க மாநகராட்சி அனுமதி அளித்தது.

இன்று பள்ளிகள் திறப்பு

இந்தநிலையில் நோய் பரவலுக்கு மத்தியில் பள்ளிகளை திறக்கலாமா? என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கிடையே இன்று முதல் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மும்பை மாநகராட்சி ஏற்கனவே பள்ளிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை அனுப்பி இருந்ததால், பள்ளி நிர்வாகங்கள் ஏற்கனவே இதற்கான முன் ஏற்பாடுகளை செய்து இருந்தன. குறிப்பாக வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் மும்பையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனினும் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என மாநகராட்சி கூறியுள்ளது.

மாநிலத்தின் பிற பகுதிகள்

மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பு தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:-

பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்கலாம். பள்ளி வரும் மாணவர்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதேபோல பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். இதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

மும்பையை போல தானே, நாசிக், ஜல்காவ், நந்துர்பர் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. நாக்பூரில் 26-ந் தேதியும், துலேவில் 27-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. புனே, அகமதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. மாநில அரசு பள்ளிகளை திறப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான முடிவு

இதற்கிடையே நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஆரம்ப பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கும் முடிவு முழுமையான பரிசீலனைக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மூளை வளர்ச்சி மேம்பட பள்ளிகளை திறப்பது மிகவும் அவசியமானதாகும். அவர்களை நீண்ட நேரம் வீட்டில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானதில்லை.

பள்ளிகளை மீண்டும் திறப்பது ஒரு ஆபத்தான முடிவு அல்லது ஆபத்துக்கும், பாதுகாப்புக்கும் இடைப்பட்ட பாதை என கூறலாம். இருப்பினும் பள்ளிகளில் வைரஸ் பரவுவதை தடுக்கவும், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அவசர சிகிச்சை படுக்கை

அரசு அதிக நெகிழ்வு தன்மையுடன் செயல்படுகிறது. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்பதை பள்ளிகளுக்கு வலியுறுத்தி உள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் 90 சதவீத ஆக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சை படுக்கைகள் காலியாக உள்ளன. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுபவர்களின் விகிதமும் குறைவாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் பட்சத்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேலும் மாநிலத்தில் இதுவரை தகுதியான 90 சதவீதம் பேர் கொரோனா முதல் டோசை எடுத்துள்ளனர். 2-வது டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை 62 முதல் 63 சதவீத வரம்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story