18 நாட்களாக லாரி ஓட்டி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு!


18 நாட்களாக லாரி ஓட்டி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு!
x
தினத்தந்தி 24 Jan 2022 3:02 AM GMT (Updated: 24 Jan 2022 3:02 AM GMT)

மாற்று டிரைவர் இல்லாத நிலையில் 18 நாட்களாக லாரியை நிறுத்தாமல் ஓட்டி வந்த லாரி டிரைவர் இதய நோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மும்பை, 

18 நாட்களாக லாரி ஓட்டிய நிலையில் உயிரிழந்த டிரைவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மும்பையை சேர்ந்தவர் ஹர்விந்தர் கவுர். லாரி டிரைவரான இவர், கடந்த 2003-ம் ஆண்டு மும்பையில் இருந்து ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தூரமுள்ள ராஞ்சிக்கு சரக்குகளை ஏற்றி கொண்டு சென்றார். அங்கு சென்ற பின்னர் மாற்று டிரைவர் இல்லாத நிலையில் மீண்டும் அவரே லாரியை ஓட்டி மும்பை வந்தார். இதே போன்று கடந்த 18 நாட்களாக லாரியை நிறுத்தாமல் ஓட்டி வந்த நிலையில் இதய நோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனால் வருமானம் இழந்த அவரது குடும்பத்தினர் தனது கணவரின் உயிரிழப்பிற்கு இழப்பீடு தரும்படி லாரி உரிமையாளரிடம் முறையிட்டனர். இதற்கிடையில் லாரி டிரைவர் ஹர்விந்தர் கவுர் உயிரிழப்பிற்கு மாரடைப்பு தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் இழப்பீடு தர லாரி உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் குடும்பத்தினர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடந்த விசாரணையில் சுமார் 3,600 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டதூரம் வாகனம் ஓட்டுவது மன அழுத்தத்தையும் நோயை உண்டாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட டிரைவரின் குடும்பத்திற்கு கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சேர்ந்து ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனம் மற்றும் லாரி உரிமையாளர் இணைந்து வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

Next Story