‘வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்’ என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் கடவுள் முன்பு சத்தியம்!


‘வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்’ என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் கடவுள் முன்பு சத்தியம்!
x
தினத்தந்தி 24 Jan 2022 3:34 AM GMT (Updated: 2022-01-24T09:04:54+05:30)

கோவா சட்டசபை தேர்தலில் ‘‘வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்’’ என்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை கடவுள் முன்பு சத்தியம் பண்ண வைத்துள்ளது.

பனாஜி, 

‘‘வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்’’ என்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை கடவுள் முன்பு சத்தியம் பண்ண வைத்துள்ளது.

பா.ஜனதா ஆளும் கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 24 எம்.எல்.ஏ.க்கள், அதாவது மொத்த எம்.எல்.ஏ.க்களில் 60 சதவீதம் பேர் கட்சி மாறி உள்ளனர். இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எங்குமே இப்படி நடந்தது இல்லை.

கட்சி தாவலால் பெரிதும் பாதிக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சிதான். கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியநிலையில், தற்போது 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.

எனவே, இந்த தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் கட்சி தாவுவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு யுக்தியை கையாண்டுள்ளது. அங்கு 34 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒரு தனி பஸ்சில் பனாஜியில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடவுள் சிலை முன்பு, ‘‘வெற்றி பெற்றால் கட்சி தாவ மாட்டோம்’’ என்று 34 பேரும் சத்தியம் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அவர்களும் சத்தியம் செய்தனர்.

இதுபோல், பனாஜி அருகே ஒரு தேவாலயத்துக்கும், தர்காவுக்கும் அழைத்து செல்லப்பட்டு சத்தியம் செய்ய வைக்கப்பட்டனர். கோவா தேர்தலுக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ப.சிதம்பரமும் உடன் சென்றார்.

வாக்காளர்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதற்காக இப்படி செய்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சூடாங்கர் தெரிவித்தார்.

ஆனால், இப்படி செய்யும் முதல் கட்சி காங்கிரஸ் அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி, கோவா பார்வர்டு கட்சி, தனது 3 எம்.எல்.ஏ.க்களையும், கட்சி நிர்வாகிகளையும் தேவ் போத்கேஸ்வர் கோவிலுக்கு கூட்டிச்சென்று இதேபோல் சத்தியம் செய்ய வைத்தது.

ஆனால் அதையும் மீறி, ஜெயேஷ் சல்கவோங்கர் என்ற எம்.எல்.ஏ., பா.ஜனதாவுக்கு தாவி விட்டார்.

காங்கிரசை விட ஆம் ஆத்மி கட்சி ஒரு படி மேலே சென்று விட்டது. வென்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என்று தனது வேட்பாளர்கள் சட்டரீதியாக பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளது.

Next Story