பஞ்சாப் மக்களை ஏமாற்றுகிறார் கெஜ்ரிவால்; சித்து குற்றச்சாட்டு


பஞ்சாப் மக்களை ஏமாற்றுகிறார் கெஜ்ரிவால்; சித்து குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jan 2022 1:27 PM GMT (Updated: 24 Jan 2022 1:27 PM GMT)

கெஜ்ரிவால் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என நவ்ஜோத் சிங் சித்து குற்றச்சாட்டு கூறியுள்ளார்.






சண்டிகர்,

பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 20ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது.  இதில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.  அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என கூறி, அதற்காக தனியாக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களில் முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மான்னை அறிமுகப்படுத்திய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி முகத்தை தேர்வு செய்வது தொடர்பாக 21 லட்சம் பேர் பதிவு செய்ததாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் முகத்திற்காக ஒரு எண்ணை அறிமுகப்படுத்தினார். அதில், சுமார் 21 லட்சம் அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார்.

அந்த எண், 24 மணிநேரமும் செயல்படும் எண்ணாக இருந்தாலும் கூட, ஒரு தனிப்பட்ட எண்ணுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெசேஜ் அல்லது அழைப்புகள் வராது. இது மக்களை ஏமாற்றும் மோசடி.  கெஜ்ரிவால் ஒரு முகமூடிக்காரர். ஒரு கருத்தை போலியாக உருவாக்க முயற்சிக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ள நிலையில், இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது மோசமான தந்திரங்களால் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என அவர் கூறியுள்ளார்.


Next Story