இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு - ஆய்வில் தகவல்


இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிவு -  ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2022 3:25 PM GMT (Updated: 24 Jan 2022 3:25 PM GMT)

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

மும்பை,

ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-16-ல் இருந்த நிலையை விட அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் அதாவது, 2020-21-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக 53% சரிந்துள்ளது. இதே ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 20% பணக்காரர்கள் தங்களின் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39% வளர்ச்சி கண்டுள்ளனர் என்பது இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் என்ற மும்பையைத் தளமாகக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

வருமானத்தின் அடிப்படையில் மக்கள்தொகையை ஐந்து வகைகளாகப் பிரித்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மிக ஏழ்மையான 20 சதவீத குடும்பங்கள் வருமானம் 53 சதவீத சரிந்துள்ளது. மேலும் எனப்படும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரின் குடும்ப வருமானம் இதே காலகட்டத்தில் 39 சதவீத சரிந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் ஆண்டு வருமானம் 9 சதவீதம் குறைந்துள்ளது.

இருப்பினும், உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார குடும்பங்களின் வருமானம் முறையே 7 சதவீதம் மற்றும் 39 சதவீதம் என்ற அளவில் இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலுக்கு முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் 20% பணக்கார குடும்பங்கள் அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.

1995 ஆண்டு வாக்கில் மொத்த குடும்ப வருமானத்தில் 50.2 சதவீதத்தை பணக்காரர்களான 20 சதவீதத்தினர் பெற்றிருந்தனர். அதுவே 2021-ல் 56.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சர்வே வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு நேர்மாறாக, 20 சதவீத ஏழை மக்களின் மொத்த குடும்ப வருமானத்தின் பங்கு 5.9 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, 2021-ல், கரோனா காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு காரணமாக இந்த 20 சதவீத ஏழை மக்கள் 2016-ல் வருமானம் ஈட்டியதில் பாதி அளவு மட்டுமே தற்போது வருமானம் ஈட்டியுள்ளனர் என்றும் அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களில் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கையில் உயர்வு: 2016-ம் ஆண்டில் 20 சதவீத ஏழைகளில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்ந்துள்ளனர். 2021-ல் இந்த எண்ணிக்கை 70 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் நகர்ப்புறங்களில் வசித்து வந்த ஏழை மக்களின் எண்ணிக்கை 2016-ல் 10 சதவீதம் என்ற அளவில் இருந்து 2021-ல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Next Story