பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 25 Jan 2022 6:50 PM GMT (Updated: 25 Jan 2022 6:50 PM GMT)

பஞ்சாப் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில், வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. 

அதே வேளையில், காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத் தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளது. 

பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆம் தேதி வெளியிட்டது. 

அதில் முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப் தொகுதியிலும், மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின்  சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டாவது கட்டமாக காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி அமர்கர் தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்துவின் மருமகன் ஸ்மித் சிங் மற்றும் முக்த்சர் தொகுதியில் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி ஹர்சரண் சிங் பிராரின் மருமகள் கரண் கவுர் ப்ரார் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story