கர்நாடகத்தில் மார்ச் 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம்


கர்நாடகத்தில் மார்ச் 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம்
x
தினத்தந்தி 25 Jan 2022 8:55 PM GMT (Updated: 25 Jan 2022 8:55 PM GMT)

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பரவல் அதிகமாக உள்ளது. அதனால் மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு சுருக்கப்பட்டு 2 பாடங்களை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. அதுவும் விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் அந்த தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் வெற்றிகரமாக தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நடப்பு ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது. கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு 28-ந் தேதி நடக்கிறது. 30-ந் தேதி 2-வது மொழி ஆங்கிலம், கன்னட தேர்வும், ஏப்ரல் 4-ந் தேதி கணிதம், 6-ந் தேதி சமூக அறிவியல், 8-ந் தேதி இந்தி உள்பட 3-வது மொழி, 11-ந் தேதி அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன என்று பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 3-வது வாரத்திற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என்று கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதனால் திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story