உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இன்று பாஜகவில் இணைகிறார்...?


உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இன்று பாஜகவில் இணைகிறார்...?
x
தினத்தந்தி 26 Jan 2022 7:45 PM GMT (Updated: 26 Jan 2022 7:45 PM GMT)

உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உப்பதையா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேராடூன்,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்த கிஷோர் உப்பதையா கடந்த 12-ம் தேதி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், பாஜக-வுடன் தொடர்பில் இருந்ததாகவும் கிஷோரை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உத்தரகாண்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிஷோர் உப்பதையா இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் தெஹ்ரி தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story