வருவாய் இழப்பு எதிரொலி: கர்நாடகத்தில் 4 போக்குவரத்து கழகங்களையும் ஒன்றிணைக்க அரசுக்கு பரிந்துரை


வருவாய் இழப்பு எதிரொலி: கர்நாடகத்தில் 4 போக்குவரத்து கழகங்களையும் ஒன்றிணைக்க அரசுக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 27 Jan 2022 1:49 AM GMT (Updated: 2022-01-27T07:19:25+05:30)

கர்நாடகத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களையும் இணைக்க அரசும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), வடமேற்கு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் என 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இந்த போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே போதிய வருவாய் இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாக அரசு கூறி வருகிறது. 

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் பயணிகள் வரத்து குறைவாலும் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பல்வேறு இன்னல்களை அரசு எதிர்கொண்டு வருகிறது. 

இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 1997-ம் ஆண்டு முதல் வருங்கால வைப்பு தொகை, காப்பீடு மற்றும் இதர படிகள், சலுகைகள் என ரூ.1,700 கோடி ஆண்டுக்கு செலவாகி வருகிறது. 4 போக்குவரத்து கழகங்களும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் என கடந்த 1961-ல் தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களாகல் 4 போக்குவரத்து கழகங்களாக பிரிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது போக்குவரத்து கழகங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வரும் நிலையில் 4 போக்குவரத்து கழகங்களையும் ஒன்றி இணைக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம், கர்நாடக அரசு மறுஒருங்கிணைப்பு குழுவுக்கு பரிந்துரை செய்து உள்ளது. எனவே கர்நாடகத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களையும் இணைக்க அரசும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story