மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் டுவிட்டர்; ராகுல்காந்தி குற்றச்சாட்டு


மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் டுவிட்டர்; ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jan 2022 7:34 AM GMT (Updated: 27 Jan 2022 7:34 AM GMT)

டுவிட்டர் நிறுவனம் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

புது டெல்லி:

மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னை பின் தொடர்பவர்களை டுவிட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் கூறியதாவது:-

டுவிட்டரில் என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 2 லட்சம் என இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் மாறி இருக்கிறது. என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அப்படியே மாறாமல் நிற்கிறது. இதை தற்செயல் என விட முடியாது. 

டெல்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து தான் இந்த பிரச்சினை தொடங்கியது. வேளாண் சட்டம் குறித்து நான் பதிவிட்ட வீடியோ ஒன்று அதிக பார்வைகளை பெற்றிருந்தபோதும் நீக்கப்பட்டது. சுவிட்டர் இந்தியாவில் வேலை செய்யும் என் நண்பர்கள் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர். என் கணக்கு கூட சில நாட்கள் முடக்கப்பட்டிருந்தது. இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 

இதற்கு பதிலளித்த டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,  டுவிட்டர் தளத்தில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. ஒருபோதும் டுவிட்டர் தளம் தன்னிச்சையாக செயல்படாது. பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருப்பது சாதாரணம் தான் என கூறியுள்ளார்.

Next Story