12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து: மராட்டிய அரசு மீது விழுந்த அடி - பட்னாவிஸ் விமர்சனம்


12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து: மராட்டிய அரசு மீது விழுந்த அடி - பட்னாவிஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 28 Jan 2022 11:05 AM GMT (Updated: 28 Jan 2022 11:05 AM GMT)

மராட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மும்பை,

மராட்டிய சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நடந்தது. இதில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த பாஜக., எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் கூச்சலிட்டு அவரைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் 12 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குதொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 12 பாஜக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் சஸ்பெண்ட் ரத்து குறித்து மராட்டிய பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் ஓபிசி சமூகத்தினரின் உரிமைகளுக்காக போராடியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 பாஜக எம்.எல்.ஏ.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை நாங்கள் வரவேற்கிறோம். 

இந்த வரலாற்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு ஜனநாயக மதிப்பை காப்பாற்றியுள்ளது. இந்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் (மராட்டிய அரசு) முகத்தில் விழுந்த அடியாகும்’ என்றார்.

Next Story