நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் - சபாநாயகர் நேரில் ஆய்வு


நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் - சபாநாயகர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jan 2022 9:31 PM GMT (Updated: 28 Jan 2022 9:31 PM GMT)

நாடாளுமன்ற வளாகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை சபாநாயகர் நேரில் ஆய்வு செய்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31-ந் தேதி தொடங்குகிறது. முதல் பகுதி, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முடிவடைகிறது. 2-வது பகுதி, மார்ச் 14-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 7-ந் தேதி முடிவடைகிறது. சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரங்களில் நடக்கின்றன.

இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று வந்தார். அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மக்களவை, மைய மண்டபம் மற்றும் இதர இடங்களை பார்வையிட்டார்.

கூட்டத்தொடர் நடக்கும்போது, கொரோனா வழிகாட்டுதல்படி, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பத்திரிகையாளர் மாடம், நடைபாதை, மைய மண்டபம் ஆகியவற்றை தூய்மையாக பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வசதிகளை மேம்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணியின் முன்னேற்றம் குறித்து அவரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். புதிய கட்டிடத்தை சுற்றிலும் உலகத்தரத்துடன் இயற்கை காட்சிகள் இடம்பெற வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டிடக்கலை சிறப்பம்சங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

Next Story