“சீனாவுக்கு எதிராக மோடியின் கண்கள் சிவக்காதது ஏன்...?” - மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
இந்திய நிலப்பரப்பில் சீனாவின் அத்துமீறலை கண்டு மோடியின் கண்கள் சிவக்காதது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய நிலப்பரப்பில் சீனாவின் அத்துமீறலை கண்டு மோடியின் கண்கள் சிவக்காதது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டில் வேலையின்மை பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும் தொழிற்சாலைகள் மூடி வருவதால் இளைஞர்கள் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலீடுகள் மற்றும் அரசுப் பணிகளும் குறைந்து வருகின்றது.
2014ஆம் ஆண்டில் பாஜக வாக்குறுதியில் ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அப்படியெனில், தற்போது 15 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எவ்வளவு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள், எதுவும் நடக்கவில்லை என்றால் நீங்கள் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள், அரசுக்கு எதிராக பேசுபவர்கள் தேசவிரோதிகளா.. எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் போதெல்லாம், மதம் ஆபத்தில் உள்ளது என்று அரசு கூறுகிறது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து இந்திய நிலப்பரப்பில் சீனாவின் அத்துமீறலைக் குறிப்பிட்டு பேசிய அவர், “பகைமை கொண்ட அண்டை வீட்டார் எங்கள் நிலத்தை அபகரித்து, வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள், இப்போது ஏன் அவர்களிடம் உங்கள் சிவப்புக் கண்களைக் காட்டவில்லை..? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, சீனாவுக்குச் சிவந்த கண்களைக் காட்டும்படி அப்போதைய எதிர்க்கட்சிகள் எங்களைக் கேட்டன.
“நீங்கள் சீனாவைப் பற்றி பேசவே இல்லை. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்..?” என்று பிரதமர் மோடி அவையில் இருந்தபோது மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story