50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாகுமா? - மத்திய அரசு விளக்கம்
50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்த மாதம் வீணாகி விடும் என வெளியான தகவல்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
புதுடெல்லி,
நமது நாட்டில் இந்த மாத இறுதியில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாத 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீணாகி விடும் என்று சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
இதையொட்டி மத்திய அரசு சார்பில் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-
* 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வீணாகி விடும் என்று வெளியாகி இருப்பது தவறானது.
* தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில் இருந்து, தடுப்பூசிகள் வீணாவது மிக குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும், இருப்பு குறித்து அவ்வப்போது ஆராய வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாகாமல் இருப்பதை உறுதிசெய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* தடுப்பூசி பயன்பாடு பற்றி தனியார் ஆஸ்பத்திரிகளுடன் கூடுதல் தலைமைச்செயலாளர் (சுகாதாரம்), முதன்மைச்செயலாளர் (சுகாதாரம்) மட்டத்தில் விரைவாக காணொலிக்காட்சி வழியாக ஆலோசனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* குறிப்பிட்ட மாநிலங்களின் கோரிக்கைகளின் பேரில் தடுப்பூசி காலாவதியாகாமல் இருக்க தனியார் துறை ஆஸ்பத்திரிகளில் இருந்து, மாநில அரசு ஆஸ்பத்திரிகளுக்கு விதிவிலக்கான அடிப்படையில் தடுப்பூசிகளை மாற்றவதற்கு முன்மொழியப்பட்ட ஏற்பாட்டுக்கு ஆட்சேபனை இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
* தனியார் ஆஸ்பத்திரிகளில் கிடைக்கிற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்காளம், மராட்டியம், கர்நாடகம், தெலுங்கானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிடம் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story