மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட சிவசேனா தயாராகி வருகிறது - அனில் பரப்


மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட சிவசேனா தயாராகி வருகிறது - அனில் பரப்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:08 AM IST (Updated: 6 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட சிவசேனா தயாராகி வருவதாக மந்திரி அனில் பரப் கூறியுள்ளார்.

மும்பை மாநகராட்சி தேர்தல்

மும்பை மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. சமீபத்தில் மும்பை மாநகராட்சி தேர்தல் வியூகங்கள் வகுப்பது தொடர்பாக பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினர்.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலை தனித்து சந்திக்க தயாராகி வருவதாக சிவசேனாவை சேர்ந்த மந்திாி அனில் பரப் கூறியுள்ளார்.

தனித்து சந்திக்க தயார்

இது குறித்து அனில் பரப் கூறுகையில், "நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம். எனினும் இது தொடர்பான இறுதி முடிவை உத்தவ் தாக்கரே எடுப்பார். மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 236 வார்டுகளில், 150 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளோம். 150 இடங்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்து உள்ளோம். குறைந்த பட்சம் 125 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நாங்கள் தனியாக மும்பை மாநகராட்சியை தக்கவைத்து கொள்வோம்." என்றார்.

அனில் பரப் ஆட்சி, கட்சி பணிகளில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு வலது கரமாக இருப்பவர் ஆவார். மேலும் அவர் மகாவிகாஸ் கூட்டணி அமைய முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியை விரும்பும் அஜித்பவார்

அதே நேரத்தில் மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தேசியவாத காங்கிரஸ் விருப்பம் தொிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், "மகாவிகாஸ் கூட்டணி நலனும், பா.ஜனதாவை மாநகராட்சியை கைப்பற்றவிடாமல் செய்வது தான் எங்களின் நோக்கம். எனவே சேர்ந்து தேர்தலை சந்திப்பது தான் சரியாக இருக்கும்.

தேர்தல் கூட்டணி அமைத்து சந்திப்பது என முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அஜித்பவார், உத்தவ் தாக்கரேவுடன் பேசுவார்" என்றார்.

குழப்பத்தில் காங்கிரஸ்

அதே நேரத்தில் காங்கிரசில் 50 சதவீத தலைவர்கள் தனித்தும், 50 சதவீதம் பேர் மகாவிகாஸ் கூட்டணியின் கீழும் மாநகராட்சி தேர்தலை சந்திக்க விரும்புவதாக அந்த கட்சியை சேர்ந்த மந்திரி அஸ்லாம் சேக் கூறியுள்ளார்.

தற்போது மும்பை மாநகராட்சியில் சிவசேனா 97 இடங்களுடனும், பா.ஜனதா 83 இடங்களுடனும் உள்ளது. காங்கிரசுக்கு 29 கவுன்சிலர்களும், தேசியவாத காங்கிரசுக்கு 8 கவுன்சிலர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர்.


Next Story