தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Feb 2022 4:27 AM IST (Updated: 6 Feb 2022 4:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவினை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்ட விவகாரம் தொடர்பாக தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி ரொசாரி தரப்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த கேவியட் மனுவில் சபையின் தலைமை சகோதரி ரொசாரி தெரிவித்துள்ளார்.

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி ரொசாரி தரப்பில் இடையீட்டு மனுவும், ரகசிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் அரசுத்தரப்பு, மனுதாரர் தரப்பு, பள்ளி நிர்வாகம் தரப்பு என 3 தரப்பிலும் வாதங்களை கேட்ட மதுரை ஐகோர்ட்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஜனவரி 31-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அண்மையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது, மாணவியின் தந்தை முருகானந்தம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story