5 மாநில சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் மேலும் தளர்வுகளை அறிவித்துள்ளது!


5 மாநில சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் மேலும் தளர்வுகளை அறிவித்துள்ளது!
x
தினத்தந்தி 6 Feb 2022 12:23 PM IST (Updated: 6 Feb 2022 12:23 PM IST)
t-max-icont-min-icon

ஜந்து மாநிலங்களில் தேர்தல் தொடர்பான மேலும் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.

ஆனால் நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை பரவி வருவதால் இந்த பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்து இருந்தது. இதில் முக்கியமாக வாகன பேரணிகள், பாதயாத்திரை, ரோடு ஷோக்கள், ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதைப்போல பிரசார பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான கூடுதல் தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேலும், தளர்வுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பொதுக்கூட்டங்கள்,உள்ளரங்க கூட்டங்கள்,பேரணிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை உட்புற அரங்குகளின் மொத்த கொள்ளளவில் அதிகபட்சமாக 50 சதவீதமாகவும் மற்றும் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் திறந்தவெளி பிரசார பொதுக்கூட்டங்களில் மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதம் என கூறியுள்ளது.

இதைப்போல வீடு வீடாக வாக்கு சேகரிப்பதற்கு முன்பு போலவே 20 பேர் வரை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரத்திற்கான தடை முன்பு போலவே தொடரும், மற்றும் பாதயாத்திரை, ரோடு ஷோ, சைக்கிள் மற்றும் வாகனப் பேரணிகளுக்கான தடையை நீட்டித்துள்ளது.

கொரோனா தொற்று விகிதம் சீராக குறைந்து வருவதையும், அதிகரித்து வரும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story