தைரியம் இருந்தால் நான் ஹிஜாப் அணிவதை தடுத்து பாருங்கள்! கர்நாடக அரசுக்கு பெண் எம்எல்ஏ சவால்
அரசுக்கு தைரியம் இருந்தால் சட்டசபையில் ஹிஜாப் அணிந்து வரும் தன்னைத் தடுத்து பார்க்கட்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த சில முஸ்லிம் சிறுமிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் வெடித்த ஹிஜாப் சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பள்ளிகளில் ஆடைகளை அணிவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனீஸ் பாத்திமா முஸ்லீம் பெண்கள் சீருடையுடன் பொருந்த கூடிய ஹிஜாபின் நிறத்தை மாற்றத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை முழுவதுமாக விட்டுவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்எல்ஏ கனீஸ் பாத்திமா, சீருடையுடன் பொருந்துவதற்காக ஹிஜாபின் நிறத்தில் மாற்றங்கள் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், ஆனால் எங்களால் அதை விட்டுவிட முடியாது. சட்டசபைக்கும் நான் ஹிஜாப் அணிந்து தான் செல்கிறேன், அவர்களால் முடிந்தால் என்னை தடுக்க பார்க்கட்டும் என்று கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “சிறுமிகள் ஒடுக்கப்படுகிறார்கள்... தேர்வுக்கு இரண்டு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. இதுவரை அனைவரும் இதை அணிந்திருந்தார்கள். ஏன் திடீரென்று எங்களைத் தடுக்கிறார்கள்? புர்கா ஒன்றும் புதிதல்ல, எனவே அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சேர்ந்த மக்களும் கலபுர்கியில் உள்ள டிசி அலுவலகத்திற்கு வெளியே திரண்டுள்ளோம், முதலமைச்சரிடம் (பசவராஜ் பொம்மை) ஒரு குறிப்பாணை அனுப்பப்படும், பின்னர் நாங்கள் உடுப்பியில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2) ஐ அரசாங்கம் செயல்படுத்தியது, இந்த சட்டம் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று கூறுகிறது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கர்நாடகத்தில் அரசின் பி.யூ.கல்லூரிகளில் அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்யும் சீருடையை மாணவர்கள் அணிந்து வருவது கட்டாயம். ஒருவேளை சீருடை அணிவது கட்டாயமல்ல என்று நிர்வாகம் கூறினால், அங்கு சமத்துவம், ஒருமைப்பாட்டை காத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் இருக்கும் ஆடைகளை மாணவர்கள் அணிந்து வர அனுமதிக்கப்படுகிறார்கள். தனியார் பி.யூ.கல்லூரிகளில் அதன் நிர்வாகங்கள் முடிவு செய்யும் சீருடையை அணிய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story