பிரதமர் புகைப்பட விவகாரம்; சகிப்பு தன்மையற்று இருக்க கூடாது: கேரள ஐகோர்ட்டு அறிவுரை


பிரதமர் புகைப்பட விவகாரம்; சகிப்பு தன்மையற்று இருக்க கூடாது:  கேரள ஐகோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 7 Feb 2022 5:00 AM IST (Updated: 7 Feb 2022 5:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதை தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக குடிமக்கள் இருக்க கூடாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.



திருவனந்தபுரம்,


கேரள ஐகோர்ட்டில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் அதனை அகற்ற வேண்டும் எனவும், பீட்டர் மையாலி பரம்பில் என்பவர் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மனுவை விசாரித்த  ஐகோர்ட்டு, இந்த மனு அரசியல் உள்நோக்கம் உடையது.  அற்பமானது. விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் உடைய அமர்வில், பீட்டர் மையாலி பரம்பில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், நீதிபதி ஷாஜி பி.சாலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்களை கவரும் நோக்கத்திற்காக தான் என, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. தடுப்பூசி சான்றிதழை தனிநபர்கள் பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இதனால் பெரிய விளம்பரம் கிடைத்து விடாது. பிரதமரின் புகைப்படமும், அதில் உள்ள வாசகங்களும் மக்களை கவர்வதற்காகவும், தடுப்பூசி போட்டு கொள்வதை ஊக்கப்படுத்தவுமே இடம் பெற்றுள்ளது. இதில் அடிப்படை உரிமை மீறல் இல்லை.  அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை இவ்வளவு எளிதாக கருத முடியாது.

ஒரு சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம் பெறுவதை கூட பொறுத்து கொள்ள முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை அற்றவர்களாக குடிமக்கள் இருக்க கூடாது.  எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம், ரூ.25 ஆயிரம் ஆக குறைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.




Next Story