கர்நாடகா : கல்லூரியில் பர்தா அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி
கர்நாடகா மாநிலம் குந்தபுராவில் உள்ள அரசு கல்லூரியில் பர்தா அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் பர்தா அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் பர்தா அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பர்தா போராட்டத்துக்கு எதிராக, சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.
இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா கூறும்போது, "மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல. மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
பர்தா, காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக்குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்" என்றார். மேலும் மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு கர்நாடக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
"நான் சட்டபேரவைக்கே பர்தா அணிந்து செல்கிறேன்; என்னை தடுக்க அவர்களுக்கு துணிச்சல் உள்ளதா?" என கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் ஃபாத்திமா சவால் விடுத்தார். முன்னாள் முதல்வர் குமாரசாமி, "
பர்தா தடையால் பெண் கல்வி பாதிக்கும்" என்று கருத்து கூறினார்.
இந்நிலையில் மாநில கல்வி மந்திரி பிசி நாகேஷ் இது குறித்து கூறுகையில்,
"ராணுவத்தில் பின்பற்றப்படும் சட்டங்கள் போலத்தான் பள்ளிகளிலும் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும். அதை மீறுவேன் என்பவர்கள் அவர்களுக்கான வழியைப் பார்த்துக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் பள்ளி வரையில் பர்தா அணிந்து வரலாம். ஆனால் கல்வி நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அதனை அகற்றி பையில் வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் எல்லோருக்கும் ஒரே சீருடைதான். இந்த விஷயத்தில் மாணவர்கள் அரசியல்வாதிகளின் கருவிகளாகிவிடாமல் இருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில் உடுப்பியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில்
பர்தா அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல குந்தபுராவில் உள்ள அரசு கல்லூரியில்
பர்தா அணிந்து செல்ல மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஜயபுராவில் உள்ள சாந்தேஷ்வர் பள்ளி வளாகத்திற்கு வந்த மாணவர்கள் சிலர் காவிக்கலர் அணிந்து வந்ததையடுத்து இன்று வகுப்புகள் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில் பர்தா விவகாரத்தில் மாணவிகள் தாக்கல் செய்த மனு நாளை கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story