லதா மங்கேஷ்கரின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் அஸ்தி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பை,
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து நேற்று இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு இருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி அஞ்சலி நிகழ்வில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே , சரத் பவார், சச்சின், ஷாருக்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் 21 குண்டுகள் முழங்க முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பாடகி லதா மங்கேஷ்கரின் அஸ்தி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது, அவரது மருமகன், ஆதிநாத் மங்கேஷ்கர், லதா மங்கேஷ்கர் தகனம் செய்யபட்ட மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் அவரது அஸ்தியை பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் கூறுகையில்,
“லதாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகனான ஆதிநாத்திடம் அஸ்தி கலசத்தை ஒப்படைத்தோம்,” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story