நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியாக உயர்வு..!
நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதன் மூலம் இதுவரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியை கடந்து விட்டது. இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்து இருக்கிறது. இதில் 95 கோடிக்கும் அதிகமான முதல் டோஸ்களும், 73 கோடிக்கு மேல் இரண்டாவது டோஸ்களும், 1.45 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில், “உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் 170 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பெரும் பலத்துடனும் வீரியத்துடனும் முன்னேறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரமான ‘சப்கா பிரயாஸ்’ மூலம், தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story