ஹிஜாப் விவகாரம்; ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் உடுப்பியில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் போராட்டம்!


ஹிஜாப் விவகாரம்; ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் உடுப்பியில் காவி சால்வை அணிந்து மாணவர்கள் போராட்டம்!
x
தினத்தந்தி 8 Feb 2022 10:50 AM IST (Updated: 8 Feb 2022 10:50 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் உள்ள கல்லூரியில் இன்று காவி சால்வை அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுப்பி,

உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் மாணவிகள் பர்தாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக குந்தாப்புரா பகுதியில் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள், மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கிவிட்டனர். முஸ்லிம் மாணவிகள் பர்தாவை கழற்றினால் மட்டுமே நாங்கள் காவி துண்டை கழற்றுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் இன்று காவி சால்வை அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக நேற்று குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்தனர். அவர்களை தடுத்த கல்லூரி முதல்வர், அரசு சீருடையில் வரும்படி உத்தரவிட்டு இருப்பதாக கூறினார். அதற்கு மாணவிகள் நாங்கள் பர்தாவை கழற்ற முடியாது, கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அதுவரை எங்களுக்கு தனி அறை ஒதுக்கி கொடுங்கள் என்று கேட்டனர்.இதை ஏற்ற கல்லூரி முதல்வர் முஸ்லிம் மாணவிகள் அமர தனி அறை ஏற்பாடு செய்தார். அதே நேரம் காவி துண்டுடன் வந்தவர்களை கல்லூரிக்குள் நுழையவிடவில்லை. துண்டை கழற்றியவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திங்கட்கிழமை கோலார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறுகையில்,  “கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பர்தா மற்றும் காவி துண்டு அணிந்து வருவது தவறு. அரசு யாருக்கும் ஆதரவாக இல்லை. அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து தான் வர வேண்டும்”  என்று சிக்பள்ளாப்பூரில் நேற்று கூறினார்.

பர்தா அணிந்து வர அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது இந்த விவகாரத்தில் கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்க உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில்  கோர்ட் தீர்ப்பு வரும் வரையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று  கர்நாடக முதல் மந்திரி  பசவராஜ்பொம்மை கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story