“எதை உடுத்த வேண்டும் என முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை”- பிரியங்கா காந்தி


“எதை உடுத்த வேண்டும் என முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை”- பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 9 Feb 2022 12:12 PM IST (Updated: 9 Feb 2022 12:12 PM IST)
t-max-icont-min-icon

தான் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை, பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

புது டெல்லி,

கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ (பர்தா) அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மதத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் காவி துண்டை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதேபோல், மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினார்கள்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு 8-ந்தேதி (அதாவது நேற்று) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரானை இன்றும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு பர்தா, காவி உடை அணிந்து வருவது தொடர்பாக மாணவர்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, சிவமொக்கா மாவட்டத்தில் சிவமொக்கா நகர், சிகாரிப்புரா, உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா, மணிப்பால் ஆகிய பகுதிகளில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று சிவமொக்கா நகரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த மோதல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் 3 நாட்கள் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலோர மாவட்டம் உள்பட பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அது பிகினி, கூங்காட், ஒரு ஜோடி ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் எதுவாக இருந்தாலும், அவள் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என டுவீட் செய்துள்ளார்.






Next Story