ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரிகளில் சீருடை திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - ஆதித்யா தாக்கரே


ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரிகளில் சீருடை திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - ஆதித்யா தாக்கரே
x
தினத்தந்தி 9 Feb 2022 5:14 PM IST (Updated: 9 Feb 2022 5:14 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரிகளில் சீருடை திட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மராட்டிய மந்திரி ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் அரங்கேறியது. இதனால், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே, பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த தனி நீதிபதி, வழக்கை ஐகோர்ட்டின் கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். 

இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மராட்டிய மந்திரியும், சிவசேனா கட்சியின் முக்கிய தலைவருமான ஆதித்யா தாக்கரேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த ஆதித்யா தாக்கரே, பள்ளி - கல்லூரிகளில் சீருடை திட்டம் உள்ளபோது அது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கவேண்டும். மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த பிரச்சினைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்குள் கொண்டுவரக்கூடாது’ என்றார். 

Next Story