கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
கொரோனா தொற்று காலத்தில் இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சியின் சுக்ராம் சிங் யாதவின் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார்.
2018 முதல் 2020-ம் ஆண்டுக்கு இடையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் சுமை, தொல்லை காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்று நோய் காலத்தின் போது வேலையில்லாதவர்கள் தற்கொலைகள் செய்வது அதிகரித்துள்ளது. 2020ல் வேலையின்மை காரணமாக அதிகபட்சமாக 3,548 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், 2019 இல் 2,851 பேரும், 2018 இல் 2,741 பேரும் இறந்துள்ளனர். என எழுத்துப்பூர்வ கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் தொடரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நித்யானந்த் ராய், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் மிஷன், ஸ்மார்ட் சிட்டி மிஷன், அனைவருக்கும் வீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்துறை தாழ்வாரங்கள் போன்ற அரசாங்கத்தின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story