பர்தா விவகாரம்; விசாரணையை தொடங்கியது கர்நாடக ஐகோர்ட்டு..!!


பர்தா விவகாரம்; விசாரணையை தொடங்கியது கர்நாடக ஐகோர்ட்டு..!!
x
தினத்தந்தி 10 Feb 2022 3:28 PM IST (Updated: 10 Feb 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய விசாரணைக்கு பின்னர் பர்தா அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி), முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (பர்தா) அணிய தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்திய எல்லையை தாண்டி பிற நாடுகளிலும் இதுகுறித்து பேசப்படுகிறது.

இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 6 பேர், கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, தங்களை ஹிஜாப் அணிந்து அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட கோரியுள்ளனர். இந்த மனு மீது நேற்று முன்தினம் ஐகோர்ட்டில், தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, கர்நாடக மாநில அரசின் சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும்,  இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்தார்.

அதன்படி, இந்த வழக்கை கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையில், நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், கே எம் காஸி ஆகிய 3 நீதிபதிகள் அமர்வு முன்பு  இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்றைய விசாரணைக்கு பின்னர் பர்தா அணியும் விவகாரத்தில் முக்கிய தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,  மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கர்நாடக மாநில ஐகோர்ட்டில்  உள்ள பர்தா தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த மனுவை அவசர விசாரணைக்கு ஏற்க கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால், இது தொடர்பான வழக்கு கர்நாடக மாநில ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவது முறையல்ல என்றும் ஏன் தலையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story