ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல - கேரள கவர்னர் ஆசிப் முகமது கான்


ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல - கேரள கவர்னர் ஆசிப் முகமது கான்
x
தினத்தந்தி 12 Feb 2022 11:40 PM IST (Updated: 12 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல என்று கேரள கவர்னர் ஆசிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. 

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. 

இந்த விவகாரம் தீவிரமடையவே மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் இஸ்லாமிய மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளைகளை திறக்க கர்நாடக அரசு உத்தவிட்டது. 

இந்நிலையில், கர்நாடகாவில் நிலவி வரும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கேரள கவர்னர் ஆசிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை குரானில் 7 முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது அதுவும், உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. இஸ்லாமிய மத பெண்கள் கல்வி கற்பதை கடினமாகவே ஹிஜாப் விவகாரத்தை சர்ச்சையாக சதித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.   

நீங்கள் எந்த உடையை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அணியாலாம். ஆனால், நீங்கள் ஒரு நிறுவனத்தில் (கல்வி) சேரும்போது அங்குள்ள விதிமுறைகள் மற்றும் உடை விதிகளை பின்பற்ற வேண்டும். ஒருவேளை நீங்கள் அந்த விதிகளை பின்பற்றவில்லையென்றால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு (கல்வி) செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் சீக்கியர்கள் டர்பன் அணிய அனுமதிப்பதையும், இஸ்லாமிய மத பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிப்பதையும் ஒப்பிட்டு விவாதிப்பது அபத்தமானது. டர்பன் சீக்கிய மதத்தின் இன்றையமையாத அங்கம். ஆனால், ஹிஜாப் என்பது பெண்களின் உடை என்ற ரீதியில் குரானில் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.

Next Story