ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது; அசாம் முதல்-மந்திரி பேச்சு


ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது; அசாம் முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2022 1:17 AM IST (Updated: 13 Feb 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது என அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன் தினம் உத்தரகாண்ட்டில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிஸ்வா தொடர்ந்து காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், ராகுல் காந்திக்கு இந்தியா என்பது குஜராத்தில் இருந்து மேற்குவங்களாம் வரையாகவே உள்ளது. அவர் கடந்த 10 நாட்களாக பேசி வருவதை நான் கவனித்து வருகிறேன். ஒரு முறை இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுகிறார். மற்றொரு முறை இந்தியா என்பது குஜராத் முதல் வங்காளம் வரை என்று கூறுகிறார்.

ஆகையால், ஜின்னாவின் ஆவி ராகுல்காந்தி உடம்புக்குள் புகுந்துவிட்டது என நான் கூறுகிறேன். இதை நான் உத்தரகாண்டில் இருக்கும்போதும் கூறினேன். 1947-ம் ஆண்டுக்கு முன்னர் ஜின்னா பேசியதை போன்று ராகுல் காந்தி தற்போது பேசுகிறார். ராகுல் காந்தி நவீன காலத்து ஜின்னா ஆவார்’ என்றார். 

Next Story